

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக வீணான சவால்களை விடுப்பதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரான் எம்பி இப்ராஹிம் அசிசி அறிவுரை வழங்கி உள்ளார்.
சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரில் ஈரானை வீழ்த்திய பிறகு உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பிராந்தியப் பகுதியாக அறிவிப்பேன் என்று பேசினார். அமெரிக்க கடற்படை அப்பகுதியில் முழு முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
ட்ரம்பின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவரான இப்ராஹிம் அசிசி எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், “ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஓயாமல் வீண் சவால்களை விடுப்பதை விட்டுவிட்டு, மீண்டும் உணவுப்பொருள் வாகனத்தில் ஒளிந்துகொள்ளும் நிலைமை வராமல் ட்ரம்ப் தனது சொந்தப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவருக்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது, ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உணவுப்பொருள் கொண்டு செல்லும் வாகனத்தில் ட்ரம்ப் ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு வேறு விமானத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதை குறிப்பிட்டுத்தான் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு எக்ஸ் பதிவாலோ, போர்க் கப்பல்களாலோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பேச்சுகளாலோ கைப்பற்றிவிட முடியாது. ஈரானை ராணுவ பலத்தைக் காட்டி அச்சுறுத்த முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பகுதியாக அறிவிப்பது குறித்து ட்ரம்ப் பேசியது ஒரு நகைச்சுவைக்காகவே தவிர தீவிரமான கருத்து அல்ல என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.