

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை நீதித்துறைக் குழுவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியினர் 53 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், ஜனநாயகக் கட்சியினர் நடத்திய நேர்காணல்களில், சுவிட்சர்லாந்து முன்னாள் அழகி பியாட்ரிஸ் கியூல் அதிபர் ட்ரம்புக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
அறிக்கையில், பியாட்ரிஸ் கியூல் கூறியிருப்பதாவது: கடந்த 1993-ம் ஆண்டு எனக்கு 24 வயது. நியூயார்க்கில் உள்ள பிளாசா ஓட்டலில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்றேன். அப்போது தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை முதன்முதலில் சந்தித்தேன். அந்தக் காலகட்டத்தில் அந்த ஓட்டல் ட்ரம்ப்புக்குச் சொந்தமானதாக இருந்தது.
ட்ரம்ப் அங்கிருந்து சென்றதும், பிளாசா ஓட்டலின் மேல்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு வருமாறு அவரது பிரதிநிதி ஒருவர் என்னை அழைத்தார். அந்த அறைக்குள் நான் நுழைந்ததும், ட்ரம்ப் என்னைப் பிடித்து வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது, எனது உடை கிழிந்ததுடன் உடலின் ரத்தக் காயங்களும் ஏற்பட்டன. இவ்வாறு கியூல் தெரிவித்துள்ளார்.