

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நவம்பர் 19-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து 3 தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், கனடா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்த அமைப்பின் இரு நாள் உச்சி மாநாடு சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷென்சென் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நவம்பர் 19-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து 3 தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யாவிடம் தலா 5,000 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. சீனாவிடம் சுமார் 600 அணு குண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 1996-ம் ஆண்டில் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்கா, ரஷ்யா உட்பட 191 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. உக்ரைன் போர் விவகாரம் காரணமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று ரஷ்யா அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா இடையே கடந்த 2010-ம் ஆண்டில் புதிய அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. உக்ரைன் போர் விவகாரத்தால் இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரியில் காலாவதியானது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா இடையே மீண்டும் அணு ஆயுத போட்டி உருவாகும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - ஈரான் போர் மிக நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
மேலும் தைவான் விவகாரத்தில் சீனா, அமெரிக்கா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க, ரஷ்ய, சீன அதிபர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று உள்ளது. அணு ஆயுத குறைப்பு மட்டுமன்றி, ஈரான் போர், உக்ரைன் போர் குறித்தும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் நேற்று கூறும்போது, “உலக அமைதி, ஸ்திரத்தன்மை குறித்து 3 நாடுகளின் தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். சர்வதேச அளவில் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அமெரிக்கா, சீனா இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைவது குறித்தும் ஆலோசிக்கப்படும்” என்றார்.