

வாஷிங்டன்: இந்தியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தங்களுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், அவற்றுக்கு இறக்குமதி வரி விதிப்பது குறித்து தனது அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் உடனான வட்டமேசை விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்காக சுமார் 12 பில்லியன் டாலர்களை விடுவிப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன் பிறகு அவர் கூறியது: “அமெரிக்க உற்பத்தியாளர்களை வெளிநாட்டு இறக்குமதி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எனது நோக்கம். இதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது இந்தியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவில் அரிசியை இறக்குமதி செய்வது அமெரிக்க விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அறிந்தேன். நிச்சயம் அதை அதிகளவில் குவிப்பது கூடாது. அதில் நான் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. கனடாவில் இருந்து அதிகளவில் உரங்கள் இறக்குமதி ஆகின்றன. அதனால் தேவைப்பட்டால் கடுமையான வரிகளை விதிப்போம்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
பரஸ்பர வரிவிதிப்பு: அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.
கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தை குறைத்தார்.
இந்தியாவுக்கு 50% வரி: இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில் துறைகடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்திலும் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.