

வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகளின் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான வரைவுத் திட்டத்தை புதன்கிழமை (நவ. 25) அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அறிவித்துள்ள இந்த புதிய திட்டத்தின்படி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இந்தியப் பொருட்களுக்கான உச்சபட்ச இறக்குமதி வரி 17 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படும்.
மாறாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இந்தியப் பொருட்களுக்கு 25% வரை வரி விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரிகள் உடனடியாக நடைமுறைக்கு வராது என்றும், இது தொடர்பாக வரும் ஜனவரி 25-ஆம் தேதி தொழில்துறையினரின் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 1974-ஆம் ஆண்டு வர்த்தக சட்டப் பிரிவின் கீழ், கடந்த மார்ச் மாதம் முதல் 8 மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் தேவையை விட அதிகப்படியான உற்பத்தித் திறனைக் கொண்டிருப்பதன் மூலம் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், எஃகு, சூரிய சக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவின் தொழில்துறை கொள்கைகள் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதகமாக இருப்பதாக வாஷிங்டன் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி மற்ற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வெவ்வேறு வரி வரம்புகளை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. அதன்படி, வங்கதேசம், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு 18 சதவீதமும், ஜப்பான், தென் கொரியா, தைவான், சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 15 சதவீதமும், சிங்கப்பூருக்கு 10 சதவீதமும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனாவைப் பொறுத்தவரை, தற்போதைய வர்த்தகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 20 சதவீத வரியும், ஜனவரி 10-ஆம் தேதிக்குப் பிறகு ஒப்பந்தம் முறிந்தால் கூடுதலாக 40 சதவீத வரியும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வியட்நாம் ஒப்பந்தம் செய்தால் 20 சதவீதமும், தவறினால் 35 சதவீதமும் வரி எதிர்கொள்ள நேரிடும்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் ட்ரம்பின் அதிகாரத்தின் கீழான உலகளாவிய வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்தியா மீது 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 17 சதவீத வரிச் சலுகையைப் பெற, இந்தியாவின் தொழில்துறை கொள்கைகளில் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, இரு நாடுகளுக்கு இடையிலான 42 பில்லியன் டாலர் வர்த்தக உபரி என்பது இயல்பான பொருளாதார நிகழ்வே தவிர, திட்டமிட்ட வர்த்தக முறைகேடு அல்ல என விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் இந்தப் புதிய வரி அறிவிப்பால், புதன்கிழமை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.