

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த சட்டம் மூலம் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டின் எரிசக்தி துறையை குறிவைத்து அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும் ‘லிண்ட்சே ஓ கிரஹாம்’ என்ற பெயரிலான மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதிநிதிகள் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டதன் மூலம், இந்த மசோதா சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்க முடியும். ஈரான் மீது கூடுதலாகப் பொருளாதாரத் தடையையும் அதிபர் ட்ரம்ப்பால் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்த புதிய சட்டத்தால் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), துருக்கி, சிங்கப்பூர், அஜர்பைஜான், கஜகஸ்தான், ஹங்கேரி, கிர்கிஸ்தான், ஸ்லோவாக்கியா ஆகிய 10 நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. எனினும், இந்திய பொருட்களுக்கு உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அர்த்தமில்லை என்று அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சட்டம் முழுமையாக அமலுக்கு வரும்போதுதான் எந்தெந்த நாடுகள், எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்ற முழு விவரங்கள் தெரியவரும்.