

வாஷிங்டன்: பிரபல கிரிப்டோ கரன்ஸி நிறுவனமான பினான்ஸ் கணக்குகளிலிருந்து 6.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,000 கோடி மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டு உள்ளன. இது கிரிப்டோ வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலாகும்.
தொடக்கத்தில், பினான்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டதன் மூலம் இத்தாக்குதல் தொடங்கியுள்ளது. இருப்பினும், இது ஒரு சாதாரண தாக்குதல் அல்ல என்றும், பல கட்டங்களாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட மிகவும் சிக்கலான தாக்குதல் என்றும் பினான்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த மிகப்பெரிய கொள்ளையின் பின்னணியில் வட கொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவு பெற்ற ஹேக்கிங் குழுக்கள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. சர்வதேச சைபர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிளாக்செயின் நிறுவனங்களுடன் இணைந்து, திருடப்பட்ட தொகையில் இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த விபத்தால் ஏற்பட்ட அனைத்து இழப்புகளையும் பினான்ஸ் நிறுவனமே முழுமையாக ஏற்கும் என்றும் அதன் இணை நிறுவனர் யி ஹே உறுதி அளித்துள்ளார்.