சிட்னி தீவிரவாத தாக்குதல்: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
சிட்னி நகரின் போன்டி கடற்கரையில் யூதர்களின் வருடாந்திர ஹனுக்கா திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. மாலையில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர். அப்போது இருவர் துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி உட்பட 11 பேர் இறந்தனர்.
ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 40 பேரில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் 50 வயது தந்தை மற்றும் 24 வயது மகன் எனத் தெரியவந்துள்ளது. இதில் தந்தை கொல்லப்பட்டார். மகன் சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் பேசினார்.
அப்போது, அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்தார். மேலும் இத்துயரமான தருணத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு இந்தியா துணை நிற்கும் என உறுதி அளித்தார்.
