

ஹோம்ஸ்: சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.
ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த மசூதி, சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில், அலவைட் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், மசூதிக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், மசூதியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிரியாவின் நீண்டகாலத் தலைவரான அலவைட் பிரிவைச் சேர்ந்த பஷர் அல்-அசாத் கடந்த ஆண்டு கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, பெரும்பான்மை சன்னி முஸ்லிம் பிரிவினரைச் சேர்ந்த உறுப்பினர்கள் தலைமையிலான அரசாங்கம் அமைந்த பின்னர், சிரியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து பல தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், மத்திய சிரியாவில் நடந்த தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும், ஒரு மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர்
ஒரு வருடத்திற்கு முன்பு அசாத் அரசு அகற்றப்பட்ட பிறகு, வழிபாட்டுத் தலத்தில் நிகழும் இரண்டாவது குண்டுவெடிப்பு இதுவாகும். கடந்த ஜூன் மாதம் டமாஸ்கஸில் உள்ள ஒரு சர்ச்சில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.