

துபாய்: 16 வயதில் உலகின் மிக இளைய ‘சாட்டர்ட் அக்கவுண்டன்ட்’ (சிஏ) பட்டம் பெற்று துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கோவிட்-19 லாக்டவுன் காலத்தில் தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்த லக் ஷ்மணன் மெய்யப்பனுக்கு, ஏசிசிஏ (சர்வதேச கணக்கியல் தொழில்முறை படிப்பு) தகுதிபெற்ற அவரது தாயார் மூலம் கணக்கியலின் அடிப்படை கருத்துகள் அறிமுகமாகி, நிதித்துறையில் ஆர்வம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, தனது 15-வது வயதில் ஏசிசிஏ படிக்கத் தொடங்கி, அதை ஒரே ஆண்டுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
அதன்பின்னர், தனது 16 வயது 141 நாட்களில் ‘சாட்டர்ட் அக்கவுண்டன்ட்’ தகுதியைப் பூர்த்தி செய்ததன் மூலம், உலகின் மிக இளைய ஆண் சாட்டர்ட் அக்கவுண்டன்ட் என்ற கின்னஸ் உலக சாதனையை துபாயில் இவர் எட்டினார். அந்த சாதனையைத் தாண்டியும் தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்த லக் ஷ்மணன், அடுத்ததாக சிஎப்ஏ (பட்டய நிதி ஆய்வாளர்) பட்டத்தையும் பெற்று, தற்போது நிதித்துறையில் முதுகலை அறிவியல் (MSc in Finance) படிப்பைப் பயின்று வருகிறார்.
இத்துடன் நிறுத்திவிடாமல், தற்போது துபாயில் உள்ள ‘சென்சுரி பைனான்ஷியல்’ நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், முதலீடுகள், சந்தை ஆராய்ச்சி மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் பணிகளைக் கவனித்து வருகிறார். கல்வி மற்றும் நிதித்துறைக்கு அப்பாற்பட்டு, ஓய்வு நேரங்களில் கடிகாரங்களை வடிவமைப்பு செய்து உருவாக்குவதிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த மைல்கல் முக்கியம்
தனது கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய லக் ஷ்மணன், “இந்த மைல்கல் எனக்கு மிகவும் முக்கியமானது; ஆனால் தகுதிகளைப் பெறுவதை நான் ஒரு போட்டியாகப் பார்க்கவில்லை. நிஜ உலகப் பொருளாதாரத்தையும், நிதி அமைப்புகளையும் புரிந்துகொள்வதே முதன்மையானது” என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிப் படிப்பிற்குப் பின் வழக்கமான படிப்புகளைத் தாண்டி, தொழில்முறைப் படிப்புகள் மூலம் வெற்றிபெற விரும்புவோருக்கு இவரது பயணம் ஒரு நல்ல முன்மாதிரியாகும்.