

கொழும்பு: இலங்கையில் கடந்த 11 நாட்களாக பெய்து வரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வானிலை பாதிப்பு தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம், "நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 31 மரணங்கள் பதிவாகி உள்ளன. 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
கனமழை காரணமாக இலங்கையின் பல இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர்" என தெரிவித்துள்ளது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த வேதனையை தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாகவும், நிலச்சரிவு காரணமாகவும் பலர் உயிரிழந்திருப்பதையும் பொருட்கள் சேதமடைந்திருப்பதையும் அறிந்து ஆழ்ந்த துயரடைந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.