

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் கட்டப்பட்டு வரும் கோயில் இடிந்து விழுந்ததில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் கவாஸுலு நேட்டால் மாகாணத்தில், தெக்வினி (டர்பன்) பகுதியின் வடக்கில் மலை மீது, அகோபிலம் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென கட்டுமானம் இடிந்து விழுந்ததில் 52 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இறந்தவர்களில் ஒருவர் விக்கி ஜெய்ராஜ் பாண்டே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கோயில் அறக்கட்டளையின் உறுப்பினராகவும், கட்டுமான திட்டத்தின் மேலாளராகவும் இருந்துள்ளார்.
இந்த கோயில் குகை போல வடிவமைக்கப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கற்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில், கோயில் கட்டுமானத்துக்கு அனுமதி எதுவும் பெறவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெக்வினி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.