

புது டெல்லி: ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று பிற்பகல் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். நமக்கு நீண்டகால பலனளிக்கக் கூடிய ஒரு வரைவுத் திட்டத்தில் நாங்கள் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக நினைக்கிறோம். இந்த விவகாரத்தில் இறுதி முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஈரானின் முழுமையான ஏற்பும், இணக்கமும் தேவைப்படும்.
அடுத்த சில மணி நேரங்களில், உலகிற்கு சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க கூடாது என்பதே எங்களின் இறுதி இலக்கு என்பதை நான் அனைவருக்கும் நினைவூட்டுகிறேன்.
ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச நீர்வழியாகும். ஆனால், சர்வதேச சட்டங்களை மீறி சர்வதேச நீர்வழியைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களை அழித்துவிடுவோம் என்று அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். வளைகுடாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து கடந்த 48 மணி நேரத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அது வெற்றி பெற்றால், இறுதியில் நமக்கு முற்றிலும் திறந்த ஹார்முஸ் ஜலசந்தியும், சுங்கக் கட்டணங்கள் இல்லாத ஹார்முஸ் ஜலசந்தியையும் கிடைக்கும். ஈரானிய அணு ஆயுத அச்சுறுத்தலை உலகம் இனி எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் இறுதி இலக்காக உள்ளது” என்றார்.
முன்னதாக, புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து ரூபியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.