

வாஷிங்டன்: வெனிசுலாவில் கச்சா எண்ணெய் எடுப்பது குறித்து அமெரிக்க எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:
மக்களுக்கு என்னைப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் மிகப் பெரிய அளவில் நடைபெறவிருந்த 8 போரை நிறுத்தினேன். இவற்றில் சில 36 ஆண்டுகள், 32 ஆண்டுகள் நடைபெற்றவை. இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அமெரிக்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இரு நாடுகள் இடையே நடைபெற இருந்த போரை நிறுத்தி லட்சக்கணக்கானோரை காப்பாற்றியதாக என்னை பாராட்டினார்.
எனது 2வது ஆட்சி காலத்தில் 8 மாதத்தில் 8 போர்களை நிறுத்தியதால், நோபல் பரிசு பெற, வரலாற்றில் என்னைவிட தகுதியானவர் வேறு யாரும் இல்லை. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அவருக்கு அதைபற்றி எதுவுமே தெரியாது. அவருக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது? எதுவும் செய்யாமல் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடனே, அவர் நோபல் பரிசு பெற்றார். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
புதினை கைது செய்வீர்களா? - கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது. அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலாயா புளோரஸ் கைது செய்யப்பட்டு, நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்வீர்களா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ட்ரம்ப் கூறும்போது, ‘‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய அவசியம் இருக்காது. அதற்கான தேவை எழாது. அதிபர் புதினு டன் நல்லுறவு நீடிக்கிறது. ஆனா லும் சில விவகாரங்களில் ஏமாற்றம் நீடிக்கிறது’’ என்றார்.