

நியூயார்க்: உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா உள்பட 47 நாடுகளின் குடிமக்களை ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா. பொதுச்சபையில் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 81-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியதாவது: உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா, நேபாளம், தஜிகிஸ்தான், ஏமன், கென்யா உள்பட 47 நாடுகளின் குடிமக்களை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. சில வெளிநாட்டு குடிமக்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவுக்கு சென்றனர். அவர்கள் வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக இந்த 47 நாடுகளின் ஒவ்வொரு பிரதிநிதியிடமும் நான் நேரடியாகப் பேச விரும்புகிறேன். புதின் உங்களை இந்தப் போருக்குள் இழுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் மக்களை வைத்து ரஷ்யா என்ன செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் உங்கள் குடிமக்கள். அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், அவர்களை போர்க்களத்தில் சிக்க விடாதீர்கள். வரவிருக்கும் குளிர்காலம் உக்ரைன் மக்களுக்கு சவாலாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
உக்ரைன் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு ரஷ்யா விலைகொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தும்.
போருக்கான நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்துவதே உக்ரைனின் நோக்கமே தவிர, ரஷ்யாவின் எரிபொருள் விநியோகத்தை முற்றிலும் அழிப்பது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.