

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த படங்களை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
“ஜி20 உச்சி மாநாடு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளேன். சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்நோக்குகிறேன். அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் எங்கள் கவனம் இருக்கும்” என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
‘ஜோகன்னஸ்பர்க் வாழ் இந்திய மக்களின் வரவேற்பு அன்பான வரவேற்பால் நெகிழ்ந்தேன். இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இவர்களின் அன்பு அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கலாச்சார ரீதியிலான பிணைப்பு மேலும் வளரும்’ என பிரதமர் மோடி மற்றொரு பதிவில் தெரிவித்துள்ள. பிரதமர் மோடிக்கு வேத மந்திரங்கள் முழங்கி சிறுவர்கள் வரவேற்பு அளித்தனர். அதையும் எக்ஸ் தளத்தில் மோடி பகிர்ந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் நவ.21 முதல் 23-ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் தென் ஆப்பிரிக்க வாழ் இந்திய வம்சாவளி மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
முன்னதாக, “'வசுதைவ குடும்பகம்' மற்றும் 'ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்' என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியாவின் பார்வையை இந்த உச்சிமாநாட்டில் முன்வைப்பேன்” என தென் ஆப்பிரிக்கா புறப்பட்ட போது பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.