

புதுடெல்லி: இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பார்த்து வியக்கிறேன் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உலக நாகரிகங்களில் இந்திய நாகரிகமே மிகவும் பழமையானது. இந்தியாவின் வரலாறை படிக்கும்போது மிகுந்த வியப்பு அளிக்கிறது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது இந்திய மக்களில் எத்தனை பேர் பிரதான மொழியை பேசுகின்றனர் என்று கேள்வி எழுப்பினேன்.
அப்போது அவர், மூன்றில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே; இதர இரு பங்கு மக்கள் அவரவர் தாய்மொழியைப் பேசுகின்றனர் என்றார். சுமார் 150 கோடி இந்தியர்களில் 60 கோடி பேர் மட்டுமே பிரதான மொழியை பேசுகின்றனர். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பார்த்து வியக்கிறேன்.
ரஷ்யாவில் பழங்கால கிறிஸ்தவம், புத்த மதம், யூத மதம், முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வசிக்கின்றனர். தற்போது சுயநலம் கொண்ட தலைவர்கள் உக்ரைனை ஆள்கின்றனர். ரஷ்யாவும் உக்ரைனும் ஒன்றாக நிற்க வேண்டும். உக்ரைன் ராணுவ வீரர்கள் சரண் அடைய அவசியமில்லை. ரஷ்யாவின் பக்கம் நிற்க வேண்டும். இவ்வாறு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.