

கோலாலம்பூர்: மலேசியாவில் வசிக்கும் தமிழர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் என பெருமையுடன் கூறினார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மலேசியாவுக்கு நேற்று சென்றார். அவரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் நேரில் வரவேற்று தனது காரில் அழைத்துச் சென்றார். இவர்கள் இருவரும் பல துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மலேசியாவில் உள்ள இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 2-வது பெரிய நாடு மலேசியா. இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுவதில் இங்குள்ள இந்தியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இங்கு தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். அதனால் தமிழை மலேசிய அரசு சிறுபான்மை மொழியாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ். தமிழ் இலக்கியம் நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. அன்வர் இப்ராஹிம் பிரதமராகுவதற்கு முன்பே நாங்கள் நண்பர்கள். அதனால் அவர் விமான நிலையம் வந்து, என்னை அவரது காரில் அழைத்து வந்தார். இது அவருக்கு இந்தியா மற்றும் இந்தியர்கள் மீதான அன்பு மரியாதையை காட்டுகிறது. இவர் பாடி இந்திப் பாடல்கள் வைரலானது. எம்ஜிஆர் பாடல்களையும் அவர் விரும்பிப்பாடுவது அருமை.
முன்பு இந்தியா மிகப் பெரிய சந்தையாக பார்க்கப்பட்டது. தற்போது, இந்தியா முதலீடு மற்றும் வர்த்தக மையமாக மாறியுள்ளது. வளர்ச்சிக்கான நம்பத்தகுந்த நாடாக இந்தியா தற்போது பார்க்கப்படுகிறது. விரைவில் சிவராத்திரி, ரம்ஜான் பண்டிகைகள் வரவுள்ளன. அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.