ஆக்லாந்து: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆரத்தழுவி வரவேற்றார்.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்து வருவது இதுவே முதல்முறை.
தனது நியூசிலாந்து பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “சிறிது நேரத்துக்கு முன்பு ஆக்லாந்து வந்தடைந்தேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற பிரதமர் லக்சனுக்கு நன்றி.
நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு மேற்கொள்ளப்படும் முதல் பிரதமர் பயணம் என்பதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைகிறது. பிரதமர் லக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், இந்தியா - நியூசிலாந்து இடையிலான நட்புறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாளை ஆக்லாந்தில் நடைபெறும் சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றிலும் உரையாற்ற உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் ஏராளமான நியூசிலாந்துவாழ் இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். பிரதமரை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆக்லாந்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரங்கள், கர்நாடக மற்றும் இந்துஸ்தானி செவ்வியல் இசையின் சங்கமம் மற்றும் வந்தே மாதரம் பாடலின் உணர்வுப்பூர்வமான இசை நிகழ்ச்சி ஆகியவை இதில் இடம்பெற்றன.
பல தலைமுறைகளாகவும் கண்டங்கள் கடந்தும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான மக்களின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் நமது இந்திய சமூகத்தினரைப் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தனது இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, பிரதமர் லக்சனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வர்த்தகம், வணிகம், பாதுகாபபு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்வார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முக்கிய வணிக மற்றும் விளையாட்டுத் துறை பிரமுகர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மேலும், இந்திய சமூகத்தினர் பெருமளவில் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் உரையாற்ற உள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையே கடந்த ஏப்ரல் மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.