ஜோர்டான் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமான நிலையத்துக்கே வந்து வரவேற்ற ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன்
ஜோர்டான் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
Updated on
2 min read

அம்மான்: ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். முதல் பயணமாக, இன்று ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். இந்தியா - ஜோர்டான் இடையேயான நெருக்கமான உறவை பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். மேலும், விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும் பிரதமருக்கு அளிக்கப்பட்டது.

அம்மான் சென்றதை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘விமான நிலையத்தில் அன்பான வரவேற்பை அளித்த ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசனுக்கு நன்றி. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடி தங்கும் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த இந்திய வம்சாவளியினர், பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் அவர்கள் பிரதமர் முன்பாக அரங்கேற்றினர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அம்மான் நகரில் உள்ள இந்திய சமூகத்தினர் அளித்த அன்பான வரவேற்பால் நான் நெகிழ்ந்து போனேன்.

அவர்களின் பாசம், இந்தியாவின் முன்னேற்றம் குறித்த பெருமிதம் மற்றும் வலுவான கலாச்சார பிணைப்புகள் ஆகியவை இந்தியாவுக்கும் அதன் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான நீடித்த தொடர்பை பிரதிபலிக்கின்றன. இந்தியா - ஜோர்டான் உறவை வலுப்படுத்துவதில் புலம்பெயர் இந்தியர்கள் ஆற்றி வரும் பங்களிப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் இருந்து புறப்படும் முன்பாக பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நான் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறேன். இந்த 3 நாடுகளுடனும் இந்தியா பழமையான நாகரீக உறவுகளையும், விரிவான சமகால இருதரப்பு உறவுகளையும் பகிர்ந்து கொள்கிறது.

முதலாவதாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஐபின் அல் ஹுசைன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது.

இந்தப் பயணத்தின் போது நான் மன்னர் அப்துல்லா II ஐபின் அல் ஹுசைன், ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன், பட்டத்து இளவரசர் அல் ஹூசைன் பின் அப்துல்லா II ஆகியோருடன் இருதரப்பு உறவு குறித்து விரிவாக விவாதிக்க உள்ளேன். பின்னர் அம்மானில் இந்தியா – ஜோர்டான் நட்புறவுகளுக்கு பெரும் பங்களிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திப்பேன்.

அம்மானிலிருந்து புறப்படும் நான் எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபி அகமத் அலி அழைப்பின் பேரில் அந்நாட்டுக்குச் செல்கிறேன். இது எத்தியோப்பியாவிற்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணமாகும். அடிஸ் அபாபா நகரம், ஆப்பிரிக்க யூனியனின் தலைமையகமாகவும் திகழ்கிறது.

2023-ம் ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தின் போது ஜி20 நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டது. அடிஸ் அபாபாவில் டாக்டர் அபி அகமது அலியுடன் நான் விரிவாக விவாதிக்க உள்ளேன். அத்துடன் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் கவுரவம் எனக்கு கிடைக்க உள்ளது.

எனது பயணத்தின் இறுதிகட்டமாக ஓமன் நாட்டுக்கு நான் செல்கிறேன். இப்பயணம் இந்தியா – ஓமன் இடையே தூதரக உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது. மஸ்கட் நகரில் ஓமன் மன்னரை சந்தித்து நமது உத்திசார்ந்த கூட்டாண்மையையும், நமது வலிமையான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்க உள்ளதை எதிர்நோக்கியுள்ளேன்.

ஓமனில் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கும் பெரும் பங்களித்துள்ள இந்திய வம்சாவளியினரையும் நான் சந்தித்து பேச உள்ளேன்’’ என தெரவித்திருந்தார்.

ஜோர்டான் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in