“ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை; இது மோடிக்கும் தெரியும்” - ட்ரம்ப்!

Trump's tariff warning

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

Updated on
1 min read

வாஷிங்டன் டிசி: “இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் டிசிக்குச் செல்லும் வழியில் விமானத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அவருடன் இருந்தார். செய்தியாளர் சந்திப்புக்கு இடையே பேசிய லிண்ட்சே கிரஹாம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாகக் குறைத்துவிட்டதாகவும், அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து பேசிய டொனால்டு ட்ரம்ப், ‘‘அமெரிக்கா விதித்துள்ள தடைகள், ரஷ்யாவை கடுமையாக பாதித்து வருகின்றன. அடிப்படையில் அவர்கள் (இந்தியா) என்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினார்கள். மோடி ஒரு நல்ல மனிதர். (ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால்) நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். நாங்கள் அவர்கள் மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும். அப்போது அது அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்’’ என தெரிவித்தார்.

அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ‘‘ஒரு மாதத்துக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கான இந்திய தூதரின் வீட்டில் இருந்தேன். ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு குறைவாக கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது என்பது குறித்து அவர்கள் பேச விரும்பினார்கள். இந்தியாவுக்கு எதிரான வரியை குறைக்குமாறு அதிபரிடம் சொல்வீர்களா என்றும் கேட்டனர்.

ஆனால், ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வாடிக்கையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 500% வரி விதிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Trump's tariff warning
டெல்லி கலவர வழக்கு | உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in