பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்
Updated on
2 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்காசியாவில் நிலவும் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் விரும்புகின்றன. இருப்பினும் அங்கு மோதல் தொடர்ந்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வியாழக்கிழமை அன்று வெளியான அறிவிப்பில் பாகிஸ்தான் பெட்ரோலிய துறை அமைச்சர் அலி பெர்வைஸ் மாலிக், “அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நம் தேசத்தில் எரிபொருளின் விலையை உயர்த்த வேண்டி உள்ளது. நமக்கான எரிபொருள் ஆதாரம் மிகவும் குறைந்த அளவில்தான் கிடைக்கிறது. அதனால் இதை தவிர்க்க முடியவில்லை,” என அரசு செய்து தொலைக்காட்சியில் அவர் தெரிவித்தார். அப்போது அவருடன் பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் இருந்தார்.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? - பாகிஸ்தான் ரூபாயில் டீசல் விலை சுமார் 54.9 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது ஒரு லிட்டர் 520.35-க்கு விற்பனை ஆகிறது. பெட்ரோல் விலை சுமார் 137.24 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 458.41 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அங்கு பெட்ரோல் விலை 42.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தானில் மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் பாகிஸ்தானில் பணவீக்கம் மேலும் உயரும் சூழல் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் கச்சா எண்ணெய் பெற்று வருகிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் மக்களுக்கு 100 ரூபாய் மானியம் அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு 20 லிட்டர் வரை இந்த விலை மானியம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும். இது அடுத்த மூன்று மாதங்கள் அமலில் இருக்கும் என நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு ஒரு முறை மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு 1,500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியில் விவசாய துறையின் பங்கு 24 சதவீதமாக உள்ளது.

காரணம் என்ன? - ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை சுமார் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது சில தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்
‘துணிச்சல் இருந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்ரோல் எடுக்கலாம்’ - ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in