வங்கி முடக்கம் எதிரொலி: பராகுவே அதிபர் சான்டியாகோ பென்யா ராஜினாமா

வங்கி முடக்கம் எதிரொலி: பராகுவே அதிபர் சான்டியாகோ பென்யா ராஜினாமா
Updated on: 
1 min read

அசுன்சியான்: பராகுவே நாட்டின் டிஜிட்டல் வங்கியான யுயேனோ (Ueno) திடீரென முடங்கி பெரும் நிதி நெருக்கடி உருவானதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அதிபர் சான்டியாகோ பென்யா வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சுமார் 65 லட்சம் மக்கள் தொகை கொண்ட பராகுவே நாட்டில், யுயேனோ வங்கியின் மூலம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் முடங்கியுள்ளனர். வங்கியின் குறைந்தபட்ச நிதிச் செலுத்துபடும் திறனில் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து பராகுவே மத்திய வங்கி இதில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குறுகிய காலத்தில் வளர்ந்து சுமார் 850 மில்லியன் டாலர் பொது நிதியைக் கையாண்டு வந்த இந்த வங்கி முடைந்த விவகாரத்தில், அதிபர் சான்டியாகோ பென்யா மீது ஓய்வூதிய நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அதிகாரபூர்வத் தகவல்களை மறைத்தது போன்ற தீவிர குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அதிபரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நாடாளுமன்ற அவசரக் கூட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதேவேளையில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆளும் கட்சியினரின் ஆதரவையும் அவர் இழந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளரான சான்டியாகோ பென்யா, நாட்டு மக்களுக்கு விடுத்த வீடியோ பதிவில் தெரிவித்ததாவது: "நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் நமது ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை திரும்பக் கிடைக்க வேண்டும்; டெபாசிட் உத்தரவாத நிதி தனது கடமையைச் செய்ய வேண்டும்; அனைத்துப் பராகுவே மக்களுக்குமான பொது நிதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை விருப்பம்" இவ்வாறு சான்டியாகோ தெரிவித்தார்.

சான்டியாகோ பென்யாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பராகுவேயின் புதிய அதிபராகத் துணை அதிபர் பெட்ரோ அலியானா பொறுப்பேற்கவுள்ளார்.

வங்கி முடக்கம் எதிரொலி: பராகுவே அதிபர் சான்டியாகோ பென்யா ராஜினாமா
ட்ரம்ப் தேர்தல் வீழ்ச்சி: இந்தியாவுக்கு சாதகங்களும், சவால்களும் என்னென்ன? - ஒரு பார்வை

X