

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்த மாதத்தில் ரூ.32 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளின் நிதியுதவியை பெரிதும் நம்பியுள்ளது. எனினும், இந்த ஆதரவு இனி உத்தரவாதமானதல்ல என்பதையும், கடுமையான நிபந்தனைகளுடன் வரும் என்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் கூறும்போது, ‘‘மற்ற நாடுகளிடம் மீண்டும் மீண்டும் நிதியுதவி கோருவது நாட்டின் சுயமரியாதையை பாதிக்கிறது. ஏனெனில் கடன் கொடுப்பவர்கள் பதிலுக்கு எதையாவது எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார்.
இந்நிலையில், ஏற்றுமதி சரிவு, முதலீடுகள் குறைவு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பாகிஸ்தான் கடும் பொருளாதார சவாலை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, ஈரானுக்கு ஆதரவு தெரிவிப்பதால், யுஏஇ உடன் பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் இந்த மாதத்தில் ரூ.32 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தக் கடனைப் பல தவணைகளாகத் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களில் வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு கடனைத் திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி வந்தன. ஆனால், இம்முறை யுஏஇ மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே அவகாசம் வழங்கியது. இது நீண்டகால கூட்டாளியான அமீரகத்தின் கடுமையான அணுகுமுறையைக் காட்டுகிறது.
இவ்வளவு பெரிய தொகையைத் திருப்பிச் செலுத்துவது பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பைக் கடுமையாகக் குறைக்கும். இது நாட்டின் வெளிநாட்டு நிதி நிர்வாகத்தைச் சிக்கலாக்கும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணியில் பிரச்சினை ஏற்படும்.