

லாகூர்: இந்தியாவுடனான வர்த்தகம் 2019-ல் நிறுத்தப்பட்டதால், பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான்-இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான்-இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி கூறியதாவது: இந்தியாவுடனான வர்த்தகம் நின்றதால், பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சர்க்கரை, உரம், சிமென்ட், பெட்ரோலியப் பொருட்கள், இரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட தேவையான பொருட்களைத் தொலைதூர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குப் பாகிஸ்தான் வணிகர்கள் தள்ளப்பட்டனர். இதனால் போக்குவரத்து, சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. மருந்துப் பொருட்களை இந்தியாவிலிருந்து நேரடியாக வாங்கினால், இத்துறை ஆண்டுக்கு 2 முதல் 3 பில்லியன் டாலர் வரை சேமிக்கலாம்.
வரலாறு, கலாச்சாரம், குடும்ப உறவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இரு நாடுகளும் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினால், இரு நாட்டு வணிகங்களுக்கும் நன்மை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.