

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் தரைமட்டமான வீட்டின் இடிபாடுகளை பார்வையிட்ட மக்கள்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் நகரில் அமைந்துள்ள பழைய காவல் துறைத் தலைமையகத்தில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் 8 தீவிரவாதிகள் சுடப்பட்டனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் தோல்விகளை மறைக்க, செப்டம்பர் 21-ம் தேதி ஆப்கானிஸ்தானின் குனார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், வீடு மற்றும் கடை சேதமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதனையடுத்து செப்டம்பர் 23-ம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்து 8 ட்ரோன்கள் ஏவப்பட்டு பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், எனினும் எல்லை தாண்டிய ஊடுருவலைத் தடுத்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலடியாக, ஆப்கானிஸ்தானில் ட்ரோன்கள் ஏவப்பட்ட மற்றும் அவை வைக்கப்பட்டிருந்த 10 இடங்களைக் குறிவைத்து துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகப் பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். எல்லை தாண்டிய இந்த மோதலால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தங்களின் இறையாண்மையைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு உரிமையின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் அட்டாவுல்லா தரார் விளக்கம் அளித்தார்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது கடுமையான அத்துமீறல் என்றும், இதற்கு ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் எச்சரித்துள்ளார்.