

முரித் விமானப்படைத் தளம்
புதுடெல்லி: கடந்த ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தானின் சக்வால் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது முரித் விமானப்படைத் தளம். இது, அந்நாட்டின் மிக முக்கியமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கியது.
கடந்த 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தானின் 10 விமானப்படைத் தளங்கள் நிலைகுலைந்தன. அதில் முரித் தளமும் ஒன்று. தாக்குதலுக்குப் பிறகு அத்தளம் தார்பாய்களால் மூடப்பட்டு, ரகசியமாகப் பழுதுபார்க்கப்பட்டு வந்தது.
இது குறித்த சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த பாதுகாப்புத் துறை நிபுணர் டேமியன் சைமன் பாகிஸ்தானின் பழுதுபார்க்கும் பணி தோல்வியடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி எடுக்கப்பட்ட படங்களில், முரித் விமானப் படைத் தளத்தில் சிதைந்த கட்டுமானக் கழிவுகளும், சிவந்த மண் தரை மட்டுமே எஞ்சியிருப்பது தெரிகிறது.
அதாவது, இந்தியத் தாக்குதலின் தாக்கம் கட்டிடத்தின் மேற்கூரையைத் தாண்டி, அதன் அடித்தளம் வரை கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அதைச் சீரமைக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக இடித்துள்ளது.
இந்திய விமானப் படையின் வலிமையான தாக்குதலின் பாதிப்பில் இருந்து பாகிஸ்தானால் மீள முடியவில்லை என்பதை இந்தச் செயற்கைக்கோள் ஆதாரங்கள் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.