ஷேக் ஹசீனா
புதுடெல்லி: வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சியால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், ‘‘ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டது ஒரு சோகமான, கண்டிக்கத்தக்க செயல். வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் கீழ், நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லாதது மற்றும் தேர்தல் வன்முறை ஆகியவையே இந்த படுகொலைக்குக் காரணம்.
வன்முறையைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, உஸ்மான் ஹாடியின் மரணம் வங்கதேசத்தில் உள்ள தீவிரவாதக் குழுக்களால் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தங்கள் தீவிரவாத சித்தாந்தங்களைத் தொடரவும், பதற்றங்களைத் தூண்டவும், ஜனநாயக நிறுவனங்களைத் தாக்கவும், இடைக்கால அரசாங்கத்தின் தவறுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் முயல்கின்றனர்.
உஸ்மான் ஹாடி கொலையில் இந்தியாவை தொடர்பு படுத்துவது திட்டமிட்டது; முற்றிலும் ஆதாரமற்றது. வங்கதேசத்தின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா மீதான விரோதத்தால் செழித்து வளரும் பயங்கரவாத சக்திகளால் இத்தகைய பொய் கதை பரப்பப்படுகிறது. உள்நாட்டு நிர்வாகத் தோல்விகளை வெளிநாட்டுச் சதிகளாக சித்தரிக்க இந்த சக்திகள் முயல்கின்றன. வங்கதேச மக்களின் எண்ணத்தை இந்த கருத்துக்கள் பிரதிபலிக்கவில்லை. அதோடு, இத்தகைய கருத்துக்கள் நாட்டின் நலன்களுக்குத் தீவிரமாகத் தீங்கு விளைவிப்பவை.
இந்தியா நமது நெருங்கிய நட்பு நாடு. இரு நாடுகளும் பல பத்தாண்டுகளாக நம்பகமான வர்த்தக, ராஜதந்திர உறவுகளைக் கட்டியெழுப்பவும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் இணைந்து பணியாற்றி உள்ளன. முகமது யூனுஸ் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை குறுகிய பார்வை கொண்டது மட்டுமல்ல, அது மிகவும் ஆபத்தானதும்கூட’’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கிளர்ச்சியை அடுத்து, ஷெரீப் உஸ்மான் ஹாடி முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். இந்நிலையில், கடந்த 2025, டிசம்பர் 12-ம் தேதி தலைநகர் டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த ஹாடி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை அடுத்து, அந்நாட்டில் உள்ள இந்துக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.