நார்வே மன்னர் ஹரால்ட் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

நார்வே மன்னர் ஹரால்ட் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
Updated on
1 min read

ஓஸ்லோ: நார்வே நாட்டின் மன்னரான ஹரால்ட் V தனது 89-ஆவது வயதில் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது மகனும் நாட்டின் புதிய மன்னருமான ஹாகன் VIII உடனடியாக பதவியேற்றுள்ளார். 

1991-ஆம் ஆண்டு முதல் நார்வே நாட்டின் தலைவராக செயல்பட்டு வந்த மன்னர் ஹரால்ட், ரத்தச் சோகை மற்றும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் காரணமாகப் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தையின் மறைவுக்குப் பின் நாட்டின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள ஹாகன் VIII, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகையில், "இந்தத் துயரமான நேரத்தில் அரச குடும்பத்திற்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவித்து வரும் நார்வே அரசுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

மன்னரின் மறைவு குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே கூறுகையில், "ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது; புதிய சகாப்தம் தொடங்குகிறது. நார்வே நாட்டுக்கு தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துச் சேவை செய்த மன்னரின் நீண்ட ஆயுளுக்காகவும் தியாகத்துக்காகவும் நாடு முழுவதும் நன்றியோடு அஞ்சலி செலுத்துகிறது" என்று தெரிவித்தார்.

மன்னர் ஹரால்ட் V மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நார்வே மன்னர் ஹாரால்ட் V மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நார்வே சென்றபோது அவரைச் சந்தித்த நிகழ்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். அவரது மறைவால் வாடும் அரச குடும்பத்திற்கும் நார்வே மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in