

புதுடெல்லி: புதிய தீவிரவாத அலை பரவி வருகிறது என்று இந்தியாவுக்கு இஸ்ரேல் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக ரூவன் அசார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அண்மையில் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃபிளை துபாய் விமானத்தை கடத்தி மோத முயற்சி நடந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இது முறியடிக்கப்பட்டது. இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீரதீரச் செயல், பயணிகளின் துணிச்சல் ஆகியவற்றின் காரணமாகவே இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. ஸ்மித் மச்சார் பாராட்டுக்குரியவர்.
சமீபகாலமாக உலகம் முழுவதும் தீவிரமான வகையில் இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல் அலை பரவி வருகிறது. தீவிரவாதிகள் நம்மை விட வேகமானவர்கள். நாம் அவர்களை விட வேகமானவர்களாக மாற வேண்டும். நாம் விடாமுயற்சியுடன் செயல்பட்டு அவர்களது தாக்குதல் திட்டங்களை முறியடிக்க வேண்டும். நிச்சயமாக அடுத்த தீவிரவாத அலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்திய பிராந்தியத்தில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஹமாஸ் அமைப்பு உத்வேகம் அளித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு தூதர் ரூவன் அசார் தெரிவித்தார்.