

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8.35 மணியளவில், இந்திய விமானப் படையின் சி-130ஜே ரக விமானம், நேபாளத்துக்கு 10 டன் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவில் இருந்து புறப்பட்டது.
சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய இமயமலை நாடான நேபாளத்தை உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் தாக்கிய 12 மணி நேரத்துக்குள் இந்த விமானம் புறப்பட்டது. முதல் கட்ட நிவாரணப் பொருட்கள் அன்றிரவே தலைநகர் காத்மாண்டுவை சென்றடைந்தன.
இந்தியாவின் இந்த விரைவான நடவடிக்கை, மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் ‘முதல் மீட்புப் படை’ என்ற இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த விரைவான நடவடிக்கை, கரோனா காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கியது முதல், 2023-ல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், 2024-ல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மியான்மர், 2025-ல் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை, 2026-ல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய உதவிகள் வரையிலான அதன் விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும்.
நேபாளத்தின் செல்வாக்கைப் பெறுவதில் வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் போட்டியிட்டு வரும் சீனா, அவசரகால நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவியை ஒருங்கிணைத்து வருவதாக அந்நாட்டின் நேபாளத்துக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நிதியைப் பரிமாற்றம் செய்வதற்கும், நிவாரணப் பொருட்களை வழங்குவதற்குமான முறையான நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.