

டெல் அவிவ்: மணிப்பூரில் வசித்து வந்த விவிலிய காலத்து இஸ்ரேலின் பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், வியாழக்கிழமை இஸ்ரேல் சென்றடைந்தனர்.
இந்தியாவில் இருந்து அவர்களை இஸ்ரேலில் குடியமர்த்துவதற்காக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்கள் நேற்றுமுன்தினம் டெல் அவிவ் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இஸ்ரேலிய தேசியக் கொடியின் நிறங்களான நீலம் மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அமைக்கப்பட்ட வளைவின் கீழ் வந்திறங்கிய அவர்களை, அங்கிருந்தவர்கள் பாரம்பரிய யூதப் பாடல்களைப் பாடி உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து சுமார் 4,600 “பெனே மெனாஷே' சமூகத்தினரை இஸ்ரேலுக்கு அழைத்து வர அந்நாட்டு அரசு கடந்த நவம்பரில் முடிவெடுத்தது. அதன் பிறகு இஸ்ரேல் வந்தடைந்த முதல் குழுவினர் இவர்கள்தான்’’ என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 720-ல் அசிரியன் படையெடுப்பாளர்களால் நாடு கடத்தப்பட்ட இஸ்ரேலின் 10 பழங்குடி இனங்களில் ஒன்றான ‘மெனாஷே’ வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
சுமார் 20 ஆண்டுகளாக இஸ்ரேலில் வசித்து வரும் தாகன் சோலட் என்பவர், சகோதரராக கருதும் தனது நண்பரை வரவேற்க விமான நிலையம் வந்திருந்தார். அவர் கூறுகையில், ‘‘மணிப்பூரில் நாங்கள் அண்டை வீட்டார். எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு சில யூதக் குடும்பங்களில் எங்களது குடும்பங்களும் அடங்கும். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு எனது நண்பரை இன்று பார்க்கிறேன். இந்தியாவில் இருந்த போது எனது மகனை அவர் தனது கைகளிலேயே சுமந்து வளர்த்தார்’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வரலாற்றுப் பின்னணி
‘ஷாவே இஸ்ரேல்' என்ற அமைப்பின் தகவல்படி, கடந்த 1990-களிலிருந்து சுமார் 4,000 பெனே மெனாஷே சமூகத்தினர் இஸ்ரேலில் குடியேறியுள்ளனர். இன்னும் 7,000-க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வசித்து வருகின்றனர். இவர்களது செவிவழி வரலாற்றின்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர்கள் பெர்சியா, ஆப்கானிஸ்தான், திபெத் மற்றும் சீனா வழியாக இடம்பெயர்ந்துள்ளனர்.
அவ்வாறு இடம்பெயர்ந்த காலத்திலும் விருத்தசேதனம் போன்ற யூத மதச் சடங்குகளை இவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்துள்ளனர். பின்னர், 19-ம் நூற்றாண்டில் மணிப்பூருக்கு வந்த மிஷனரிகளால் இவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டனர் என்பது இவர்களது வரலாற்றுப் பின்னணியாக அறியப்படுகிறது.
தற்போது இடம்பெயர்ந்து வந்துள்ள 250 பேரும் வடக்கு இஸ்ரேலில் குடியமர்த்தப்பட உள்ளனர். இஸ்ரேலிய குடியுரிமை பெறுவதற்காக அவர்கள் முறைப்படி யூத மதத்துக்கு மாற வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. விமான நிலையத்தில் இவர்களை வரவேற்ற இஸ்ரேல் குடியேற்றத் துறை அமைச்சர் ஓஃபிர் சோஃபர் கூறுகையில், ‘‘இது ஒரு வரலாற்றுத் தருணம். ஆண்டுக்கு 1,200 பேர் வீதம், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் இங்கு அழைத்து வருவதற்கான ஒரு மாபெரும் திட்டத்தின் தொடக்கம்தான் இது’’ என்றார்.