

டேஜியோன்: தென்கொரியாவின் மத்திய நகரமான டேஜியோனில் ஒரு வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்தில் 59 பேர் காயமடைந்தனர் என்றும், நான்கு பேரைக் காணவில்லை என்றும் தென் கொரிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? - தென் கொரியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது டேஜியோன் நகரம். இங்குள்ள வாகன உதிரிபாகத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்தவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறை, விமானங்கள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகளில், அந்த வளாகத்திலிருந்து அடர்த்தியான சாம்பல் நிறப் புகை வெளியேறுவதும், சில தொழிலாளர்கள் ஒரு கட்டிடத்திலிருந்து குதிக்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியைக் கடத்தின.
இந்த தீவிபத்து குறித்து பேசிய தீயணைப்புத் தலைவர் நாம் டியூக் வூ, “தீ விபத்தில் ஒரு தொழிற்சாலை கட்டிடம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அது இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தில் தீயணைப்பு வீரர்கள் ஆரம்பத்தில் உள்ளே நுழைய முடியவில்லை. கட்டிடத்தைக் குளிர்விப்பதற்காக ஆளில்லா தீயணைப்பு ரோபோக்களை அதிகாரிகள் பயன்படுத்தி பாதுகாப்பு ஆய்வு நடத்திய பின்னர்தான், காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணிகள் நேற்றிரவு தொடங்கின.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1:18 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள், தீ அருகிலுள்ள கட்டிடத்திற்குப் பரவாமல் தடுப்பதிலும், அந்த இடத்திலிருந்து ரசாயனங்களை அகற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 59 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், நான்கு பேரைக் காணவில்லை” என்றார்.