

மெக்கா: பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் இடையே நேற்று முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி எதிரி நாடுகளால் சவுதி அரேபியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான், சவுதி அரேபியாவுடன் புதிதாக துருக்கியும் கைகோத்து உள்ளது.
சவுதி அரேபியாவின் மெக்காவில் நேற்று சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்த நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர், துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில் கூறியிருப்பதாவது: பல்வேறு விவகாரங்களில் 3 நாடுகள் இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. முஸ்லிம் மதம் 3 நாடுகளையும் ஒன்றிணைக்கிறது. இதன் அடிப்படையில் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் நாடுகள் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. புதிய ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும். மூன்று நாடுகளும் ஓரணியாக செயல்படும். இவ்வாறு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முஸ்லிம் நேட்டோ கூட்டமைப்பு
இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் 32 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் பெரும்பாலானவை கிறிஸ்தவ நாடுகள் ஆகும். சர்வதேச அரங்கில் வலுவான ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ விளங்குகிறது. இதே பாணியில் பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இது முஸ்லிம் நேட்டோ என்று அழைக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக சுமார் ஓராண்டுக்கும் மேலாக 3 நாடுகள் இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதன் இறுதிக் கட்டமாக தற்போது முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.