இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்
ஜெருசலேம்: ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் வரும் வாரத்தில் கணிசமாக அதிகரிக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி மூன்று வாரங்கள் முடிவடைந்து, நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வரும் வாரத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காட்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘‘இந்த வாரம் ஈரானிய பயங்கரவாத ஆட்சிக்கு எதிராகவும், அது சார்ந்திருக்கும் உள்கட்டமைப்புகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் (IDF) அமெரிக்க ராணுவமும் மேற்கொள்ளும் தாக்குதல்களின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும்’’ என்று இஸ்ரேல் காட்ஸ் இன்று (சனிக்கிழமை) ஒரு காணொலியில் தெரிவித்துள்ளார்.
முரண்பட்ட அணுகுமுறை?
மத்திய கிழக்கில் தனது ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். உலகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், ட்ரம்ப் சமூக ஊடகங்களில் இப்பதிவை வெளியிட்டார்.
எனினும், அமெரிக்கா மேலும் மூன்று போர் கப்பல்களையும், சுமார் 2,500 கூடுதல் கடற்படை வீரர்களையும் அப்பகுதிக்கு அனுப்பி வருகிறது.
இதனிடையே, இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் - அமெரிக்க கூட்டுத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை பிரிட்டன் கண்டித்துள்ளது.
ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டியாகோ கார்சியா விமானத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல், அந்த நாடு மிக அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.