‘இப்போதும் பாசிஸ்ட் என்பீர்களா?’ - மம்தானியை ‘யெஸ்’ சொல்லச் சொன்ன ட்ரம்ப்!

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், மம்தானி

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், மம்தானி

Updated on
2 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோரான் மம்தானி சந்தித்தார். அப்போது அவரிடம், “நீங்கள் இப்போதும் ட்ரம்ப்பை ஒரு பாசிஸ்ட் என்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட, அதற்கு ட்ரம்ப் ரியாக்ட் செய்தவிதம் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப், “நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோரான் மம்தானியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்தது” என்று கூறினார். ஓவல் மாளிகையில் தனக்கு அருகில் மம்தானி நிற்கையில் அவர் இவ்வாறு கூறினார். 

மம்தானி - ட்ரம்ப் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக நடந்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவருமே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களின் குரலில் முன்பு நிலவிய எதிர்ப்பு தொனி சற்றே தணிந்திருந்ததை கவனிக்க முடிந்தது.

அப்போது பேசிய ட்ரம்ப். “மம்தானி எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறாரோ நான் அவ்வளாவு மகிழ்ச்சியாக இருப்பேன். புதிய மேயர் அவர் பணிகளில் வெற்றி பெற விரும்புகிறேன். எங்களுக்குள் ஒரே ஒரு விஷயம் தான் பொதுவானது. அது நியூயார்க் நகரம் சிறப்பாக இருக்க வேண்டுமென்பது. அதை நாங்கள் சிறப்பாகச் செய்ய வாஞ்சையோடு இருக்கிறோம். மேலும், மேயர் பதவியேற்றதும் மம்தானி அதிக கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் எனக் கோருகிறேன். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் தனது பார்வைகளில் சிலவற்றில் மாற்றம் செய்வார் என்று நம்புகிறேன். நான் அதிபரான பின்னர் எனது சில பார்வைகளும் மாறியுள்ளன. அந்த வகையில் பழமைவாதிகளுக்கு சில ஆச்சர்யங்களை மம்தானி நல்குவார் என நம்புகிறேன்” என்றார்.

மம்தானி பேசுகையில், “அதிபர் கூறியதுபோல் இந்தச் சந்திப்பு நியூயார்க் நகரின் நலன்கள் மீதான பரஸ்பர அன்பு, ஈர்ப்பில் கவனத்தை குவிப்பதாக இருந்தது. இது ஆக்கபூர்வமான சந்திப்பாக இருந்தது. 

நியூயார்க் நகரின் வீட்டு வாடகை, மளிகைப் பொருட்களின் விலை, அத்தியாவசிப் பொருட்களின் விலைவாசி பற்றி நாங்கள் பேசினோம். மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளைப் பற்றி பேசினோம். நியூயார்க் நகரின் 8.5 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம்.” என்றார்.

இப்போதும் பாசிஸ்ட் என்பீர்கள்? - அப்போது மம்தானியிடம் செய்தியாளர் ஒருவர், “ட்ரம்ப்பை நீங்கள் பாசிஸ்ட் என விமர்சித்துள்ளீர்கள். இப்போதும் அதைச் சொல்வீர்களா?” என்று கேட்டார். அதற்கு மம்தானி, “ஆம், நான் அவரை அப்படி விமர்சித்துள்ளேன்.” என்று சொல்லி விளக்கமளிக்க முற்பட்டபோது ட்ரம்ப் குறுக்கிட்டு, “இட்ஸ் ஓகே. நீங்கள் ஆம் என்றே சொல்லலாம். ஆம் என்பது விளக்குவதைவிட எளிது. நான் ஏதும் நினைக்கமாட்டேன்.” என்றார். அப்படிச் சொல்லும்போது ட்ரம்ப் மெலிதாக மம்தானியின் கையில் தட்டியும் கொடுத்தார். மம்தானியும் புன்னகையுடன், “ஆம்” என்றார்.

நியூயார்க் மேயர் தேர்தலின்போது ட்ரம்ப்பை மம்தானி ‘பாசிஸ்ட்’ என்று விமர்சித்ததும், பதிலுக்கு மம்தானியை ட்ரம்ப் ‘கம்யூனிஸ்ட்’, ‘ஜிஹாதிஸ்ட்’ என்று விமர்சித்ததும், அதற்கும் ஒருபடி மேலே சென்று ‘புரட்சிகர இடதுசாரி மனப்பிறழ்ச்சி கொண்டவர்’ என்று கடும் சொற்களால் தாக்கியதும் உலகளவில் விவாதப் பொருளானது.

இந்நிலையில் இந்த சந்திப்புக்குப் பின்னர் ட்ரம்ப், “இந்த ஓட்டத்துக்காகவே மம்தானியை நான் பாராட்டுவேன். எங்களுக்குள் எல்லாம் சரியாகும். நாங்கள் இருவருமே வலுவான நியூயார்க்கை விரும்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.

மம்தானி, “எங்களுக்குள் நிறைய கருத்து வேற்றுமைகள் உள்ளன.  ஆனால் இப்போது இருவரும் நியூயார்க் வலுவாக இருக்க விரும்புகிறோம். ஆனால், நியூயார்க்கர்களுக்கு எதிராக ஏதேனும் கொள்கை வகுக்கப்பட்டால் முதல் எதிர்ப்புக் குரல் என்னுடையதுதான்” என்று கூறியுள்ளார். 

<div class="paragraphs"><p>வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், மம்தானி</p></div>
யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in