

லண்டன்/டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போதைய போரை தீவிரப்படுத்தினால், அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ்செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் அரசு நிர்வாகத்துக்கு நெருக்கமான இரு முக்கிய மூத்த அதிகாரிகள் இதுகுறித்து கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப அண்மையில் அனுமதி அளித்த பல்கேரியாவின் ‘பெஸ்மர்’ விமானப் படைத் தளத்தைக் குறிவைப்பது குறித்து ஈரான் படைகள் தற்போது ஆராய்ந்து வருகின்றன. மேலும், சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டன் விமானப் படைத் தளத்தைக் குறிவைப்பதும் அவர்களின் பரிசீலனையில் உள்ளது.
போரின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள கடல்வழி ஒளியிழை கேபிள்களை துண்டிப்பது குறித்தும் ஈரான் ராணுவப் படைகள் ஆய்வு செய்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் முக்கியப் பொறுப்புகளில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களை அண்மையில் நியமித்துள்ளார்.
ஈரானின் கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு மண்டலத்தையும் தாண்டி ஐரோப்பா வரை ஈரானின் தாக்குதல் விரிவடையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். ஈரான் நிலப்பரப்பின் மீது தாக்குதல் நடத்தப் பயன்படும் எந்தவொரு ராணுவத் தளமும் எங்களின் தாக்குதலுக்கு உரிய இலக்காகக் கருதப்படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படைப் பிரிவு (ஐஆர்ஜிசி) ஏற்கெனவே எச்சரித்துள்ளது.