

வாஷிங்டன்: ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர ஈரானுக்கு வேறு வழி இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போரை கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. எனினும் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பாக என்பிசி நியூஸ் ஊடகத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாங்கள் போர் நிறுத்தத்தை மீறவில்லை. ஈரான் ராணுவம் அத்துமீறும் போது தகுந்த பதிலடி அளிக்கிறோம்.
ஈரானின் ட்ரோன், ஏவுகணை உற்பத்தி ஆலைகளை முழுமையாக அழித்துவிட்டோம். அவர்களின் ஏவுதளங்களை தகர்த்து உள்ளோம். எனினும் அவர்களிடம் இன்னமும் 22 சதவீதம் அளவுக்கு ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளன. ஈரான் வலுவாக இருப்பதாக அந்த நாட்டின் தலைவர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர ஈரானுக்கு வேறு வழியே இல்லை. இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக சிறிது காலம் ஆகலாம். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானை ஒட்டி உள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள் தடுப்பு அரண்களை அமைத்துள்ளன. இதன்மூலம் ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் சரக்கு கப்பல்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் தடுத்து வருகின்றன. இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அந்த ட்ரோன்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோக்சின் நக்வி, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரை பாகிஸ்தான் அமைச்சர் நக்வி நேற்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவின் சார்பில் ஈரான் தரப்புடன் அவர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.