

தெஹ்ரான்: தீய எதிரிகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் தீர்க்கமான அடியை கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கோமேனியின் 37-வது நினைவு நாளையொட்டி மொஜ்தபா கமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை, அயதுல்லா ருஹோல்லா கோமேனியின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத போதகரால் வாசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இந்த அறிக்கை மொஜ்தபா கமேனியின் எக்ஸ் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், “அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் ஏகாதிபத்திய சக்திகள் கடந்த 80 ஆண்டுகளாக இஸ்ரேல் என்ற பெயரில் ஒரு ராணுவ தளத்தை உருவாக்கியுள்ளன. போலியானதும், சட்டவிரோதமானதுமான அந்த இஸ்ரேலின் கிழக்கே, வலிமையான, சுதந்திரமான ஈரான் எனும் தேசம் இருப்பதை ஏற்க மறுக்கிறது.
ஈரானின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகள் எதையும் செய்ய தயாராக உள்ளன. அந்த தீய எதிரி, ஈரானின் ஆயுதப்படை வீரர்களுடனான நேரடி மோதலில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ராணுவ ரீதியிலான போர்க்களங்களிலும் சரி, ஈரானின் தெருக்களிலும் சரி அது ஒரு தீர்க்கமான அடியை வாங்கி இருப்பதால் தற்போது அவமானத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
அந்த எதிரி, இரண்டு முக்கிய அம்சங்கள் மீது தனது சதித் திட்டத்தை தீட்டி வருகிறது. ஒன்று, ஈரான் மக்களின் மனவுறுதியை சிதைப்பது. மற்றொன்று, நாட்டின் அதிகாரிகளின் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்துவது. இதற்காகவே, சந்தேகம், விரக்தி, அச்சம், அவநம்பிக்கை, பிளவு ஆகியவற்றின் விதைகளை அவர்கள் விதைக்கிறார்கள். எதிரியின் தீய நோக்கங்களை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் அந்த சதித்திட்டத்தை தகர்த்தெறிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் ராணுவத் தளங்கள் பல சேதம் அடைந்தன. இந்நிலையில் இரு நாடுகள் இடையே கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் முன்வராததால், போர் நிறுத்தம் ஏற்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் போர்ச் சூழல் வலுத்துள்ளது கவனிக்கத்தக்கது.