இந்தோனேசியாவில் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்தனர் என்றும், 67 பேரைக் காணவில்லை எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக நேற்று ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கால் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மூழ்கின என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்கு தபனுலி மாவட்டத்தில் இன்று (நவ.27) 17 உடல்களும், சிபோல்கா நகரில் 8 உடல்களும் மீட்கப்பட்டதாக வடக்கு சுமத்ரா மாகாண காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஃபெர்ரி வாலிண்டுகன் தெரிவித்தார்.

மத்திய தபனுலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என்றும், பாக்பக் பாரத் மாவட்டத்தில் 2 பேரும், ஹம்பாங் ஹசுண்டுடான் மாவட்டத்தில் 2 பேர் மற்றும் நியாஸ் தீவில் ஒருவர் உயிரிழந்தனர் என வாலிண்டுகன் தெரிவித்தார்.

மேலும், சில தொலைதூரப் பகுதிகளை இன்னும் அடைய முடியவில்லை என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வடக்கு சுமத்ரா மாகாணத்தில் மழை தொடரும் என்றும், அடுத்த வாரம் வரை தீவிர மழை பெய்யும் அபாயம் தொடரும் என்றும் இந்தோனேசியாவின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு சுமத்ரா மாகாணத்தில் வெள்ளத்தால் சுமார் 47,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 1,500 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு சுமத்ரா மாகாண தலைநகர் படாங்கில் உள்ள லுமின் பார்க் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய6 பேரின் உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டதாக பேரிடர் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. படாங்க் பரியாமன் மாவட்டத்தில் 3,300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், அக்டோபர் முதல் மார்ச் வரை பெய்யும் பருவ மழையால் அடிக்கடி வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

இந்தோனேசியாவில் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in