

புதுடெல்லி: இலங்கையில் பெய்த கனமழை மிகவும் மோசமான பேரழிவை ஏற்படு்த்தியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 463 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) அனுப்பி வைக்கப்பட்டது. மேலும்,வெள்ள நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஆயிரக்கணக்கா னோரை இந்திய படை மீட்ட நிலையில், MyGovIndia இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “தைரியமான கரங்களில் நம்பிக்கை! இலங்கையில் வெள்ள நிவாரண நடவடிக்கையின்போது வீட்டில் தண்ணீரில் தத்தளித்த பச்சிளங் குழந்தையை இந்திய என்டிஆர்எப் வீரர் ஒருவர் கையில் ஏந்தி பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். நெருக்கடி நிலையின்போது, இந்தியாவின் தூய மனித நேயம், தைரியம், இரக்கத்தை படம்பிடித்து காட்டும் ஒரு உன்னத தருணம் இது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், “குழந்தை பாதுகாப்பான கரங்களில் உள்ளது", “இதுதான் நம்மை இந்தியாவோடு ஒருங்கிணைக்கிறது", "அன்புக்கு எல்லைகள் கிடையாது" என்று இந்தியாவை பாராட்டி பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.