

வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில், முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களின் வெற்றியும் தோல்வியும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 35 இடங்களுக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது. மேலும், 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிக்கான தேர்தலும் நடைபெற்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் வெற்றியும், சிலர் தோல்வியும் கண்டு கவனம் பெற்றுள்னர். அவர்களின் தேர்தல் முடிவுகள் விவரம்:
விவேக் ராமசாமி
இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்தார். ட்ரம்பின் ஆதரவைப் பெற்ற அவர், கடந்த மே மாதம் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார்.
சுஹாஸ் சுப்பிரமணியம்
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆலோசகராகப் பணியாற்றிய சுஹாஸ் சுப்பிரமணியம் (40), அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வர்ஜீனியா மாகாணத்தின் 10-வது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 61 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இந்தியப் பெற்றோருக்கு ஹூஸ்டன் நகரில் பிறந்த சுஹாஸ், ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராகப் பணியாற்றினார்.
பியா தண்டியா
முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியையான பியா தண்டியா (39), புளோரிடா மாகாணத்தின் 22-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு 51.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் புளோரிடாவின் பாம் பீச் கவுன்டி பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.
ரோ கண்ணா - ரிதேஷ் டாண்டன்
கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ரோ கண்ணா மீண்டும் வெற்றி பெற்றார். சிலிக்கான் வேலி பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிதேஷ் டாண்டன் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.
பிரமிளா ஜெயபால்-நிரவ் ஷேத்
வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிரமிளா ஜெயபால் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் குஜராத்தில் பிறந்த முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான குடியரசுக் கட்சி வேட்பாளர் நிரவ் ஷேத். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த பிரமிளா ஜெயபால், 2017-ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
அமி பெரா
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமி பெரா (61), கலிபோர்னியாவின் 3-வது நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சி வேட்பாளர் ராப் டக்கரைத் தோற்கடித்த அவர், 8-வது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்த இவர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். 1965-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் குஜராத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3-வது இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
பூஜா சேத்தி
ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பூஜா சேத்தி, டெக்சாஸ் மாகாண சட்டப்பேரவையின் 47-வது தொகுதியில் வெற்றி பெற்றார். வழக்கறிஞரான இவர், இதற்கு முன்பு டெக்சாஸ் சட்டப்பேரவையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
சந்தீப் ஸ்ரீவஸ்தவா
ஜனநாயகக் கட்சி வேட்பாளரான சந்தீப் வஸ்தவா, டெக்சாஸ் மாகாண சட்டப்பேரவையின் 66-வது தொகுதியில் போட்டியிட்டார். தொழிலதிபரான இவர், சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தொகுதியில் ஏற்கெனவே 5 முறை வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர்மாட் ஷஹீனைவிட சந்தீப் ஸ்ரீவஸ்தவா பின்தங்கியுள்ளார்.
அமிஷ் ஷா
அரிசோனா மாகாணத்தின் முதல் நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மருத்துவரும், முன்னாள் மாகாண சட்டப்பேரவை உறுப்பினருமான அமிஷ் ஷா முன்னிலை வகிக்கிறார். இவர் ஏற்கெனவே அரிசோனா மாகாண சட்டப்பேரவையில் 3 முறை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.
அருணா மில்லர்
மேரிலாந்து மாகாண துணை ஆளுநராகப் பதவி வகித்து வந்த அருணா மில்லர் மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1964-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த இவர், தனது 7-வது வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணரும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சில் உறுப்பினருமான நித்யா ராமன், அந்த நகர மேயர் தேர்தலில் முன்னிலை வகித்தார். இதுபோல மாகாண சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் கணிசமான அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.