சவுதி விமான நிலைய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்

சவுதி விமான நிலைய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்தின் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், “புதன்கிழமை இரவு தம்மாம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இருவரில் ஒருவர் இந்தியர். மேலும், இரண்டு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எனினும், தம்மாம் விமான நிலையத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை சவுதி அரேபிய அதிகாரிகள் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இதற்கு முன்பாக, நேற்று (புதன்கிழமை) சவுதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமடைந்தார். இந்த மாத தொடக்கத்தில் ரியாத்தில் உள்ள கிங் காலத் சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி விமான நிலைய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்
“உக்ரைன், மேற்கு ஆசிய அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு” - பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in