

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால், இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்க செனட் உறுப்பினர்கள் லிண்ட்சே கிரஹாம், ரிச்சர்ட் ப்ளூமெந்தால், ஷெல்டன் ஒயிட்ஹவுஸ், பீட்டர் வெல்ச், டான் சுலிவன் மற்றும் மார்க்வேனி முலின் ஆகியோரை இந்திய தூதர் வினய் மோகன் கத்ரா, ஏற்கெனவே சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த நிலையான ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இதை வரவேற்ற இந்திய தூதர் வினய் மோகன் கத்ரா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க எம்.பி.க்கள் 12 பேரை, இந்தியா இல்லத்தில் சந்தித்தது மகிழ்ச்சி. வர்த்தகம், நவீன தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு முயற்சி ஆகியவற்றில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் இவர்கள் தெரிவித்த ஆதரவை வரவேற்கிறேன்.
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்’’ என தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையும் இதில் அடங்கும்.