பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் ‘தேர்தல்’ முழுமையான கேலிக்கூத்து: இந்தியா

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் ‘தேர்தல்’ முழுமையான கேலிக்கூத்து: இந்தியா
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் ‘தேர்தல்கள்’ முழுமையான கேலிக்கூத்து என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 10 என மூன்று கட்டங்களாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் தேர்தல்கள் ஒரு முழுமையான கேலிக்கூத்து. உண்மையில் அங்கு நடப்பது, மக்கள் போராட்டங்களும், அவர்களுக்கு எதிரான கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளும்தான். இத்தகைய ‘தேர்தல்களால்’, அங்கு நடைபெறும் மக்கள் போராட்டங்களையும் பாகிஸ்தான் படைகளின் கண்மூடித்தனமான கொலைகளையும் மறைக்க முடியாது.

சமீப மாதங்களாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடர்ந்து நடைபெறும் ஒடுக்குமுறையில் குறைந்தது 90 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

‘தேர்தல்’ என்ற போர்வையைப் பயன்படுத்தி தனது நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் பெற பாகிஸ்தான் முயல்கிறது. துப்பாக்கிச்சூடு, மின்வெட்டு, மிரட்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றின் மூலமே, மக்களின் அதிருப்திக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பு தேவை. மனித உரிமைகள் குறித்த பாகிஸ்தானின் பாசாங்குத்தனமான உபதேசங்களின் பின்னணியில் உள்ள உண்மையை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இந்தியாவுடனான ஆப்கனிஸ்தானின் உறவை விமர்சித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப், “முஸ்லிம்கள் காஃபிர்களுடன் (இறைநம்பிக்கை இல்லாதவர்கள்) நட்பு கொள்ளக்கூடாது. ஆனால், காபூல் ஏன் புதுடெல்லியுடன் உறவு கொள்கிறது.” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்துக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், “இத்தகைய கருத்துக்கள் இந்தியா - ஆப்கனிஸ்தான் உறவுகளின் நேர்மறையான வளர்ச்சியைப் பார்த்து பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற உணர்வையே பிரதிபலிக்கின்றன.” என தெரிவித்தார்.

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்ற உள்ளதாக வெளியாகி உள்ள செய்திகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், “இதில் இந்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு தனியார் ஊடக அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

முன்னதாக, ஷேக் ஹசீனாவின் இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த வங்கதேச அரசு, வங்கதேசத்தில் ஸ்திரமின்மையை உருவாக்குவதற்கு இந்தியாவின் நிலப்பரப்பைப் பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் ‘தேர்தல்’ முழுமையான கேலிக்கூத்து: இந்தியா
“பிரதமர் மோடிக்கு ஓர் எச்சரிக்கை மணி” - பிஹார் இடைத்தேர்தலில் வென்ற பிரசாந்த் கிஷோர் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in