குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி

Zohran Mamdani sworn in as New York City mayor

நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி

Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார்.

யார் இந்த ஜோரான் மம்தானி? - நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி.

34 வயதான ஜோரான் மம்தானி ஒரு சட்ட வல்லுநர். அவர் தனது தேர்தல் பிரச்சாரங்களில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயரடுக்கு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்று கூறி கவனம் ஈர்த்திருந்தார்.

அவரது பிரச்சாரங்களுக்கு ஆதரவு பெருக அந்த ஆதரவு அலைகளோடு நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, 20 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அவர் ஜனவரி 1-ம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

பதவியேற்பிலும் கவனம் ஈர்த்த மம்தானி: அதன்படி அவர் பதவியேற்றுக் கொண்டார். பிரச்சாரங்களில் , வெற்றி உரைகளில் மட்டுமல்லாது பதவியேற்பில் புதுமை செய்துள்ளார் மம்தானி. அவரது பதவியேற்பு விழா இரண்டு கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, நள்ளிரவு தனிப்பட்ட விழாவில், தனது தாத்தாவின் குர்ஆன் மற்றும் புகழ்பெற்ற கருப்பின எழுத்தாளர் ஆர்டுரோ ஸ்காம்பர்க் வைத்திருந்த குர்ஆன் சாட்சியாக பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி மான்ஹாட்டன் நகரின் கைவிடப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை முன்னர் நடைபெற்றது.

பின்னர் ஒரு சிற்றுரை ஆற்றிய மம்தானி, “இது என் வாழ்நாளுக்கான கவுரவமும், உரிமையாகும் ஆகும்.” என்றார்.

மேலும், மான்ஹாட்டன் சப்வே பற்றி அவர் கூறுகையில், “இது நமது நகரத்தின் உயிர்ப்பு, சுகாதாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு பொது போக்குவரத்தின் முக்கியத்துவத்துக்கான ஒரு சான்றாக திகழ்கிறது.” என்றார்.

தொடர்ந்து, மக்கள் பங்கேற்கும் பெரிய விழா நகர மன்றம் முன்பு நடைபெற உள்ளது. அந்தப் பதவி பிரமாணத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் செய்துவைக்கிறார்.

மம்தானி அமெரிக்க நகர மேயர்களில் முதல் தெற்காசிய, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயர். அமெரிக்க அரசியலில் கூர்ந்து கவனிக்கப்படும் ஓர் அரசியல்வாதியாக இருக்கிறார்.

Zohran Mamdani sworn in as New York City mayor
திமுகவை தேர்தலில் பதம் பார்க்குமா ‘பழைய ஓய்வூதியத் திட்டம்’ வாக்குறுதி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in