‘‘நான் துபாயில் இருக்கிறேன்’’ - உஸ்மான் ஹாடி கொலையில் சந்தேக நபர் வீடியோ வெளியீடு

‘‘நான் துபாயில் இருக்கிறேன்’’ - உஸ்மான் ஹாடி கொலையில் சந்தேக நபர் வீடியோ வெளியீடு
Updated on
2 min read

டாக்கா: வங்கதேச மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பைசல் கரீம் மசூத், தான் துபாயில் இருப்பதாகவும், உஸ்மான் ஹாடி கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

வங்கதேச மாணவர் தலைவரான உஸ்மான் ஹாடி, கடந்த 12-ம் தேதி டாக்காவில் முகமூடி அணிந்த நபர்களால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த ஹாடி, முதலில் டாக்காவில் உள்ள மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்நாட்டில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களின் வீடுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்து இளைஞர் ஒருவர் பலர் முன்னிலையில் அடித்து தூக்கிலிடப்பட்டு கொலுத்தப்பட்டார். மேலும், இரண்டு இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்துக்கள் பலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. ப்ரோதோம் அலோ, டெய்லி ஸ்டார் ஆகிய நாளிதழ்களின் அலுவலகங்களும் தாக்கப்பட்டன.

உஸ்மான் ஹாடியை கொலை செய்தவர்கள், மேகாலயா வழியாக தப்பியதாகவும் அவர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் வங்கதேச ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. இதனால், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வங்கதேசத்தினர், சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்து வந்தனர். எனினும், உஸ்மான் ஹாடி கொலையில் தொடர்புடையவர்கள் இந்தியாவுக்கு தப்பவில்லை என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உறுதிபட தெரிவித்தது.

இந்நிலையில், கொலை குற்றவாளியாகக் கருதப்படும் பைசல் கரீம் மசூத் சமூக ஊடகம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார். வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது: நான் பைசல் கரீம் மசூத். உஸ்மான் ஹாடி கொலையில் எனக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது. புனையப்பட்ட சதியின் அடிப்படையிலானது இந்த வழக்கு.

எனது குடும்பத்தினர் நிரபாரதிகளாக இருந்தபோதிலும், இந்த வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டு, கடுமையாக துன்புறுத்தப்படுகின்றனர். என் குடும்பத்தினருக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் அநீதியானவை. இவற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவறான குற்றச்சாட்டின் காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் துபாய் விசா இருந்தபோதிலும் நான் மிகுந்த சிரமத்துடன் இங்கு வந்தேன்.

நான் ஹாடியின் அலுவலகத்துக்குச் சென்றது உண்மை. நான் ஒரு தொழிலதிபர். எனக்கும் ஹாடிக்குமான உறவு என்பது தொழில் சார்ந்தது. ஒரு வேலை தொடர்பாக நான் ஹாடியைச் சந்திக்கச் சென்றேன். அந்த வேலையை முடிப்பதற்கு அவர் முன்பணம் கேட்டார். நான் அவருக்கு 5,00,000 டாக்கா கொடுத்தேன். பலமுறை நான் அவருக்கு நிதி வழங்கி உள்ளேன். கடந்த வெள்ளிக்கிழமைகூட அவருடைய ஒரு நிகழ்ச்சிக்கு நான் பணம் கொடுத்தேன். ஹாடியின் கொலைக்கு ஜமாத் அமைப்பே காரணம். ஹாடி ஒரு ஜமாத் தயாரிப்பு. ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘‘நான் துபாயில் இருக்கிறேன்’’ - உஸ்மான் ஹாடி கொலையில் சந்தேக நபர் வீடியோ வெளியீடு
கலிதா ஜியாவுக்கு பிரியாவிடை - இறுதிச் சடங்கில் தலைவர்கள் பங்கேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in