‘‘எனது தாய் விட்டுச் சென்ற மக்கள் பணியை நான் தொடருவேன்’’ - தாரிக் ரஹ்மான்

Tariq vows to carry his mom's legacy

தாரிக் ரஹ்மான்

Updated on
2 min read

டாக்கா: “எனது தாய் எவ்வாறு நாட்டு மக்களுக்காக பாடுபட்டாரோ நானும், அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மக்களுக்கான எனது பணியை தொடங்குவேன் என்று வங்கதேசத்தின் மறைந்த தலைவர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவராக இருந்தவருமான கலீதா ஜியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், அவரது கணவரான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்துக்கு அருகில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கலீதா ஜியாவின் மறைவை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டாக்கா சென்று தாரிக் ரஹ்மானை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாரிக் ரஹ்மான் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடக செய்தியில், ‘‘எனது அன்புக்குரிய தாயாரும், என் வாழ்வின் முதல் ஆசிரியரும், மூன்று முறை பிரதமராக இருந்தவருமான கலீதா ஜியாவின் உடலை, எனது தந்தையும் நாட்டின் அதிபராக இருந்தவருமான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்தேன். அவர் இல்லாத வெறுமையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எனினும், முன் எப்போதும் இல்லாத அளவிலான நாட்டு மக்களின் அன்பு இந்த கடினமான தருணத்தில் என்னை தனிமையில் தவிக்க விடவில்லை.

எண்ணற்ற தலைவர்கள், நலம் விரும்பிகள், குடும்பத்தினர், நாட்டு மக்கள் ஆகியோரின் அன்பு மற்றும் மரியாதையால் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தவும், அன்பை வெளிப்படுத்தவும் எங்களுடன் நிற்கவும் ஒன்றுகூடிய விதம் எனக்கு ஒன்றை நினைவூட்டியது. அவர் எனது தாய் மட்டுமல்ல; பல வழிகளில் அவர் முழு தேசத்தின் தாயும் ஆவார்.

தெற்காசிய நாடுகளின் பல்வேறு உயர்மட்ட பிரதிநிதிகள், சர்வதேச ராஜதந்திரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இரங்கல் தெரிவித்த நாடுகளுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனுதாபம் எங்கள் இதயங்களைத் தொட்டுள்ளது. இன்று பலரின் அன்பு காரணமாக, ஒரு அன்புக்குரியவரை இழந்ததன் வெறுமையைக் கடந்து, முழு வங்கதேசமும் எனது குடும்பமாக மாறிவிட்டது போல உணர்கிறேன்.

எனது தாய் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக அயராது சேவை செய்தார். இன்று நான் அவர் வகித்த பொறுப்பையும் மரபையும் ஆழமாக உணர்கிறேன். அதே ஆழமான பொறுப்புடன் நான் உறுதி அளிக்கிறேன்: தனது கடைசி மூச்சு வரை தனக்கு அன்பும் நம்பிக்கையும் வலிமையும் உத்வேகமும் அளித்த மக்களுக்காக எனது தாய் எவ்வாறு பாடுபட்டாரோ, நானும் அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அவரது பாதையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிப்பேன்.

எனது தாயின் ஆன்மாவுக்கு கடவுள் சாந்தி அளிக்கட்டும். அவர் நம் அனைவருக்கும் அளித்த எல்லையற்ற அன்பு, தியாகம், தாராள மனப்பான்மை ஆகியவற்றில் இருந்து நாம் வலிமையையும் ஒற்றுமையையும் தேசபக்தியையும் பெறுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

Tariq vows to carry his mom's legacy
சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர தீ விபத்து: 10+ பேர் உயிரிழப்பு; 100+ காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in