

வாஷிங்டன்: உலகளவில் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சேவை முடக்கத்திற்குப் பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணையவழிச் சேவைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் சார்லஸ் லமன்னா எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “உலகளவில் மைக்ரோசாஃப்ட் சேவைகள் படிப்படியாக சீரடைந்து வருகின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுமையடைந்துள்ளன. தரவுப் போக்குவரத்து படிப்படியாகச் சீர்செய்யப்பட்டு வருகிறது.
இமெயில் கணக்குகளை அணுகுவது மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவது உள்ளிட்ட முக்கியச் சேவைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இருப்பினும், சில பயனர்களுக்குத் தொடர்ந்து அவ்வப்போது சிறிய இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் தகவல்களைத் தொடர்ந்து பகிர்வோம். தற்போதைய நிலவரப்படி, இது விஷமத்தனமான அல்லது சைபர் தாக்குதல் நடவடிக்கைகளால் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.