

கலிபோர்னியா: நிலவைச் சுற்றிவர கடந்த 1-ம் தேதி ஆர்டெமிஸ் -2 விண்கலத்தில் புறப்பட்ட நாசா குழுவினர், நேற்று வெற்றிகரமாக பூமி திரும்பினர்.
சுமார் 50 ஆண்டு இடைவெளிக்குப் பின் நிலவுக்கு ஆர்டெமிஸ்-2 விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்களை நாசா கடந்த 1-ம் தேதி அனுப்பியது. இந்த விண்கலத்தில் சென்ற நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்காமல் விண்வெளியில் நீண்ட தூரம் பயணம் செய்து நிலவை அருகில் சுற்றி வீடியோ, படங்கள் எடுத்தனர்.
நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆர்டெமிஸ்-2 விண்கலம் பூமி திரும்பியது. பாராசூட்கள் மூலம் கலிபோர்னியா கடல் பகுதியில் விழுந்து மிதந்த ஆர்டெமிஸ்-2 விண்கலத்தை அமெரிக்கக் கடற்படை வீரர்கள் மீட்டனர். விண்கலத்திலிருந்து படகில் இறக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களும் ஹெலிகாப்டர் மூலம் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் யுஎஸ்எஸ் ஜான் பி.முர்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விண்வெளி வீரர்கள் நலமுடன் உள்ளனர்.
ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் அசோசியேட் நிர்வாகியாக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி அமித் ஷத்ரியா. அமெரிக்காவில் படித்து வளர்ந்த அமித், கடந்த 2003-ம் ஆண்டு நாசாவில் இணைந்தார். விண்கலங்களின் செயல்பாடுகள், ரோபோட்டிக்ஸ் இன்ஜினீயரிங், சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தேவையான உதவிகளை அளிப்பது ஆகிய பிரிவில் பணியாற்றினார். கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் பணியாற்றி வந்தார்.
அமித் ஷத்ரியா அளித்த பேட்டியில், ‘‘நிலவுக்குச் சென்று திரும்பும் பாதை இப்போது தெளிவாக உள்ளது. இனி நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளம். நிலவில் தளம் அமைக்கும் ஆய்வு மேற்கொள்ளும் பணியை நாங்கள் முடிப்போம்’’ என்றார்.